USAID நிதியுதவிகள் குறித்த விசாரணை அவசியம் ; தற்போது எழுந்துள்ள சர்ச்சை
உலகளவில் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளித்து வரும் யு.எஸ்.ஏ.ஐ.டி (USAID) தற்போது சர்ச்சையின் மையமாகியுள்ளது.
மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி,
இந்த அமைப்பு மனிதாபிமான உதவி என்ற பெயரில் பல நாடுகளில் குழப்பத்தையும் ஸ்திரமின்மையையும் ஏற்படுத்த பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இலங்கையில் கடந்த சில ஆண்டுகளில் யு.எஸ்.ஏ.ஐ.டி வழங்கிய நிதி மற்றும் மானியங்கள் பற்றிய தெளிவான கணக்குகள் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது கருத்துப்படி. இலங்கை யு.எஸ்.ஏ.ஐ.டி-யிடமிருந்து மில்லியன் கணக்கான டொலர் நிதியைப் பெற்றுள்ளது.
100க்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) நேரடியாக இந்த நிதியை பெற்றதோடு, அரசியல்வாதிகள், ஊடகப் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இதன் பயனாளிகளாக இருந்துள்ளனர்.
ஆனால், இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து எந்தவொரு சரியான கணக்கீடுகளும் இல்லையென அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
எனவே, யு.எஸ்.ஏ.ஐ.டி.யின் கீழ் செயல்படும் திட்டங்கள் மற்றும் வழங்கப்பட்ட மானியங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அதன் முடிவுகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இலங்கையில் அரசு சாரா நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிதிகள் பற்றிய விதிமுறைகள் இருந்தாலும், அவை சரிவர அமுல்படுத்தப்படவில்லை.
இந்த நிதி உதவிகள் பற்றிய வெளிப்படைத்தன்மை மற்றும் கணக்கீடுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, உரிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.