பெண் பத்திரிகையாளருடன் நேர்காணல்; உலகை திரும்பி பார்க்க வைத்த தலிபான்கள்
தலிபான் அமைப்பின் முக்கிய நிர்வாகி பெண் செய்தியாளருடன் நேர்காணலில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வந்த 20 வருட உள்நாட்டு போர் நிறைவு பெற்று, தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். அமெரிக்காவின் படைகள் வாபஸ் பெறுவதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, பல நகரங்களில் வன்முறையை கட்டவிழ்த்து அதனை தலிபான் கைப்பற்றியது.
எனினும் இறுதியாக அமைதிப்பேரணி போல நடத்தி காபூலை கைப்பற்றி இருந்தாலும், அங்கு வெளியுலகுக்கு தெரியாமல் பல வன்முறை கட்டவிழ்த்துப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், தலிபான் அமைப்பின் முக்கிய நிர்வாகி பெண் செய்தியாளருடன் நேர்காணலில் பேசும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டினை சார்ந்த டோலோ செய்தி (Tolo News) என்ற செய்தி ஊடகத்திற்கு தலிபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் குழுவை சார்ந்த மவ்லவி அப்துல்ஹக் ஹேமாத் பெண் செய்தியாளருடன் நேர்காணலை எதிர்கொண்டார்.
செய்தியாளர் பெஹேஷ்டா ஆர்கண்ட் (Beheshta Arghand) தலிபான் செய்தித்தொடர்பாளர் குழுவை சார்ந்த மவ்லவி அப்துல்ஹக் ஹேமாத்துடன் (Mawlawi Abdulhaq Hemad) ஆப்கான் மற்றும் காபூல் நிலவரங்கள் குறித்து கேட்டறிகிறார். அதோடு , காபூலில் வீடு வீடாக தலிபான் நடத்திய சோதனை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மவ்லவி (Mawlawi Abdulhaq Hemad), " தலிபான்கள் தான் நாட்டின் உண்மையான ஆட்சியாளர்கள் என்பதை இப்போது உலகம் முழுவதும் அங்கீகரிக்கிறது. தலிபான்களுக்கு மக்கள் பயப்படுவது எனக்கு இன்னும் ஆச்சரியமாக இருக்கிறது " என தெரிவித்தார்.
ஏனெனில் இஸ்லாமிய அடிப்படை சித்தாந்த கொள்கையில் தீவிரமாக ஈடுபட்டு இருக்கும் தலிபான் பயங்கரவாத அமைப்பு, அதன் அச்சுறுத்தலை தீவிரப்படுத்தி இருந்த சமயத்தில் பல கொலைகள், வன்முறைகளை நடத்தியது யாவரும் அறிந்ததே.
அத்துடன் பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதலும் நடத்தப்பட்டது. பெண்கள் பர்தா அணிதல், படிக்க செல்ல கூடாது, பர்தா அணியாத சிறுமி சுட்டுக்கொலை என பல சம்பவங்கள் கொடூர சம்பவங்களும் பதிவாகியிருந்தது.
ஆட்சி அதிகாரத்தை பிடிப்பதற்கு முன்னதாக பல வன்முறை குற்றச்சாட்டுக்களுடன், சொந்த நாட்டு பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக வேட்டு வைப்பது போல செயல்பட்ட தலிபான் அமைப்பு, தற்போது பெண் செய்தியாளருடன் நேர்காணலில் ஈடுபட்டு இருப்பது உலகின் கவனத்தை திரும் வைத்துள்ளதுடன் , இந்நேர்காணல் பெரும் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் , இது நீடிக்குமா?. உலக நாடுகளிடம் தங்களை நல்லவர்கள் என காட்ட தலிபான்கள் நிகழ்த்தும் நாடகமா? என சந்தேகம் எழுப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தின் நடவடிக்கையை பொறுத்தே அவர்களின் நடவடிக்கை உறுதி செய்யப்படும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.