ஏமாறாதீர்கள்; யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றதாகவும் இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம் நன்கு இடம்பெற்றுள்ள நிலையில் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி
நிகழ்நிலை செயலி (online App) ஒன்றினை மக்களிடையே பகிர்ந்து அதில் முதலீடு செய்யுமாறு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த செயலியில் ஆரம்பத்தில் சிறிய தொகையை முதலிடுவதன் மூலம் சிறிய அளவிலான கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
மக்கள் முதல் வருமானத்தை நம்பி அடுத்த தடவை பெரிய ஒரு தொகையை முதலீடு செய்யும் பட்சத்தில் அந்த நிதியானது மோசடியாளர்களால் அபகரிக்கப்படுகிறது.
வங்கி கணக்கில் பணத்தினை வைப்புச் செய்துள்ளவர்களது கணக்கு இலக்கங்கள் மற்றும் அடையாள அட்டை இலக்கங்கள் என்பன ஆசை வார்த்தை கூறி மக்களிடமிருந்து மோசடியாளர்களால் பெறப்படுகிறது.
அதன் பின்னர் அவர்களது கைபேசிக்கு இரகசிய இலக்கம் அனுப்பப்பட்டு அவர்களிடமிருந்து அந்த இரகசிய இலக்கமானது பெறப்பட்டு அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் மோசடி செய்யப்படுகிறது.
அதேவேளை யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சம்பவங்கள் சமகாலத்தில் அதிகரித்து காணப்படுகின்றதாகவும் இது குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அறிவித்துள்ள நிலையில் மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.