யாழ். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ; சிறுவனின் இரத்த மாதிரிகள் கொழும்பு ஆய்விற்கு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுவனின் இரத்த மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இளைஞனின் சிறுநீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டதாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி எம்.மயூரதன் தெரிவித்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
இந்தநிலையில், போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளமையை உறுதிப்படுத்தும் நோக்கில், உயிரிழந்த இளைஞனின் இரத்த மாதிரிகள், அரச இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இளைஞனின் உடலம் மீது மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் போது, நெற்றி வழியாக, மூளைப்பகுதிக்கு துப்பாக்கி தோட்டா பாய்ந்துள்ளமை தெரியவந்துள்ளதாக சட்ட மருத்துவ அதிகாரி கூறியுள்ளார்.
எனினும், குறித்த துப்பாக்கிச்சூடு அருகிலிருந்து மேற்கொள்ளப்பட்டமைக்கான காயம் அல்ல எனவும், குறிப்பிட்ட அளவு தொலைவில் இருந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளைஞனின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நாளை இறுதி கிரியைகள் நடத்தப்படக்கூடும் என பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டுக்கோட்டை - சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பொலிஸாரின் கட்டளைகளை மீறி பயணித்ததால் இந்த துப்பாக்கி பிரயோகம் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.