தென்னை பயிர்ச்செய்கைக்கும் காப்புறுதித் திட்டம் அறிமுகம்
நாட்டில் புதிய தென்னை பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் தென்னம்பிள்ளைகளுக்கான புதிய காப்புறுதித் திட்டம் ஒன்றை விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தக் காப்புறுதித் திட்டத்தின் கீழ், சலுகைக் கட்டண அடிப்படையில் வறட்சி, வெள்ளம், அதிக மழை, சூறாவளி, மண்சரிவு மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் தென்னைப் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
ஒரு தென்னம்பிள்ளைக்கு 40 ரூபாய் காப்புறுதி வாரிக் கட்டணமாக செலுத்துவதன் மூலம், வருடாந்தம் 550 ரூபாய் பெறுமதியான காப்புறுதி இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என சபை தெரிவித்துள்ளது.

மேலும், அதிகபட்சமாக ஆறு ஆண்டுகள் காலத்திற்கு 875 ரூபாய் வாரிக் கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம், ஒரு தென்னம்பிள்ளைக்கு வருடாந்தம் 12,450 ரூபாய் வரையிலான காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை அனர்த்தங்கள் மற்றும் காட்டு யானைகளின் தாக்குதல்கள் காரணமாக தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளைக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என விவசாய மற்றும் விவசாயிகள் காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.
இந்த புதிய காப்புறுதித் திட்டம் மூலம் தென்னை விவசாயிகள் பாதுகாப்பான முறையில் தங்களது பயிர்ச்செய்கையை முன்னெடுத்து செல்ல முடிவதுடன், நாட்டின் தென்னை உற்பத்தியை அதிகரிப்பதற்கும் இது பங்களிப்புச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.