புகையிரத போக்குவரத்து சேவைகள் தொடர்பில் வெளியான தகவல்
எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய ஆரம்பிக்கப்படும் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பயணிகள் புகையிரதத்திற்குள் சமூக இடைவெளியை பேணவேண்டும் என்ற காரணத்தினால் அதிக புகையிரதங்கள் போக்குவரத்து சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன என தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தது,
கடந்த ஒரு மாதகாலமாக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதும் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவையில் 108 புகையிரத பயணங்களை சேவையில் ஈடுப்படுத்த திட்டமிட்டிருந்தோம்.
இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவை, நெடுந்தூர புகையிரத பயண சேவை ஆகியவற்றை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இதேவேளை காலை மற்றும் மாலை அலுவலக புகையிரத சேவையை அதிகரிக்கவும், பாணந்துறை, குருநாகல் மற்றும் வெயாங்கொட பகுதிகளில் அதிவேக புகையிரத சேவைகளை வழமைக்கு மாறாக அதிகரிக்கவும், திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.