தரமற்ற நிலக்கரி தொடர்பில் அரசு ஊடக சந்திப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் இல்லாத நிலக்கரியை விநியோகித்தமைக்காக, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து சுமார் 2.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக லங்கா நிலக்கரி நிறுவனத்தின் பொது முகாமையாளர் நாமல் ஹேவகே தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் நிபுணர்கள் முன்னிலையில் பெறப்பட்ட நிலக்கரி மாதிரிகள், மேலதிக பரிசோதனைக்காக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது நிலக்கரி கப்பலில் பெறப்பட்ட மாதிரிகளில் எவ்வித சிக்கலும் இல்லை. தற்போது மூன்றாவது மற்றும் நான்காவது கப்பல்களில் இருந்து நிலக்கரி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
நிலக்கரி எரிப்பதால் வெளியாகும் சாம்பலினால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிபுணர்கள் உறுதியளித்துள்ளதாக பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.
நிலக்கரி எரிப்பின் போது பறக்கும் சாம்பல் மற்றும் அடிச் சாம்பல் என இரண்டு வகையான சாம்பல் உருவாகிறது.
குறிப்பாக பறக்கும் சாம்பல் எனப்படும் சாம்பலுக்கு சந்தையில் அதிக கேள்வி உள்ளது. இதனை அகற்றுவதற்கு என பிரத்யேக இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தச் சாம்பல் சுற்றுச்சூழலுக்குத் திறந்த நிலையில் விடப்படாமல், உரிய முறையில் நுகர்வோர்களால் கொண்டு செல்லப்படுவதால் சூழல் பாதிப்பு ஏற்படாது என அவர் உறுதியளித்தார்.