கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்கள்
கொழும்பு, மாளிகாகந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக விசாரணை
நீதிமன்றத்திற்கு வழக்கு ஒன்றிற்காக வந்த தம்பதியினரை இலக்கு வைத்து, அதன் அருகில் இன்று (14) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 40 வயதுடைய பெண் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களின் இலக்கு அந்த பெண்ணுடன் இருந்த ஆணாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் அவர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்குக்காக வந்தபோது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
இன்று பிற்பகல் 3 மணியளவில் மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
மாளிகாகந்த நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் நடந்து சென்று கொண்டிருந்த தம்பதியரை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் டி.ஏ. நிலுகா தில்ஹானி என்ற கொழும்பு 13 பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய பெண் ஆவார். இதில் பலத்த காயமடைந்த அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்