முட்டை விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம், அண்மையில் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாயினால் குறைக்க தீர்மானித்தது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாயாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாயாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முட்டை உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் அண்மையில் ஹெட்டிபொல காவல் நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தனர்.
இதனிடையே சந்தையில் 18 ரூபாய்க்கு முட்டைகள் கிடைப்பதில்லை என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.
25 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை சந்தையில் முட்டை விற்கப்படுவதாதக நுகர்வோர் குறிப்பிடுகின்றனர்.
அதன் போது கருத்துத் தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, ஒருசிலர் திட்டமிட்ட நோக்கங்களுக்காக முட்டை விலை தொடர்பில் தீர்மானங்களை எடுத்துள்ளதாகவும் அனைத்து முட்டை உற்பத்தியாளர்களின் ஒருமித்த தீர்மானம் இல்லையெனவும் குறிப்பிட்டார்.
அதிகரித்த உற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு முட்டை ஒன்றினை 18 ரூபாய்க்கு விற்க முடியாது என அவர் கூறினார்.
உற்பத்தி செலவு அதிகமாகவுள்ளதால் 18 ரூபாய்க்கு முட்டை ஒன்றினை விற்கும் போது தாம் நஷ்டத்தை எதிர்நோக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டார்.
மேலும், தாம் கடந்த சில மாதங்களாகவே நஷ்டத்திலேயே முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்து வருவதாக கூறினார்.
இந்த விடயங்களில் அரசாங்கம் தலையிட்டு தமக்கு நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கிமிடத்து முட்டை விலைகளை குறைக்க வாய்ப்புள்ளதாக கூறிய அவர், உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வரை முட்டை விலைகளை குறைக்க முடியாது என குறிப்பிட்டார்.
இதனிடையே முட்டை ஒன்றை 23 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை நுகர்வோருக்கு வழங்க முடியும் என அந்த சங்கத்தின் தலைவர் சரத் தெரிவித்தார்.
உற்பத்தியாளர்களிடமிருந்து தற்போது 23 மற்றும் 25 ரூபாய்க்கு தாம் முட்டைகளை கொள்வனவு செய்வதாக குறிப்பிட்ட அவர் சந்தையில் தற்போது முட்டை ஒன்று 26 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக கூறினார்.
சில இடங்களில் 30 ரூபாய் வரையும் முட்டை விற்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாட்டில் முட்டைக்கான கேள்வியை பூர்த்தி செய்ய 95,000 கோழிகள் போதுமானதாக இருந்தாலும் தற்போது 140,000 முட்டையிடும் கோழிகள் நாட்டில் உள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.
நாளொன்றில் சராசரியாக முட்டைக்கான தேவை 95 இலட்சமாக இருந்த போதிலும் தற்போது ஒரு கோடியே 50 இலட்சம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முட்டைகளை அரசாங்கம் சலுகை விலையில் கொள்வனவு செய்யுமிடத்து தமக்கு அது நிவாரணமாக அமையும் எனவும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்தார்.