ஓரின சேர்க்கையாளருக்கான சுற்றுலா ஊக்குவிப்பு ; வெளியான முக்கிய தகவல்
இலங்கையில் LGBTIQ சமூகத்தினரை விசேடமாக இலக்கு வைத்து எவ்வித சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை என இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று (04) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்
தேசஹித தேசிய இயக்கம்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சுற்றுலா திட்டம்
தனியார் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபையின் தலைவரால் கடந்த காலத்தில் கடிதமொன்று வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையில் 'LGBTIQ சமூகத்தை மையப்படுத்தப்பட்ட சுற்றுலா திட்டத்தை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கி அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது.
குறித்த அனுமதிக் கடிதத்தை செல்லுபடியற்றதாக்கக் கோரியே கலாநிதி குணதாச அமரசேகர மற்றும் கலாநிதி வசந்த பண்டார உள்ளிட்டோர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்றையதினம் விசாரணைக்கு வந்தபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி, "இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை தற்போது இது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவொன்றை எட்டியுள்ளது.
அதன்படி, இனிவரும் காலங்களில் LGBTIQ சமூகத்தை மையமாக வைத்து எவ்வித விசேட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களும் இலங்கையில் முன்னெடுக்கப்படமாட்டாது." எனத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, குறித்த சர்ச்சைக்குரிய அனுமதிக் கடிதம் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளமை நீதிமன்றில் உறுதிப்படுத்தப்பட்டது.