தங்காலை போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்
தங்காலை, கிரிந்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகை, இந்தியாவில் உயிரிழந்ததாகக் கூறப்படும் அங்கொட லொக்காவின் போதைப்பொருள் வலையமைப்பைச் சேர்ந்த ஒருவரும், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் தரப்பினரும் நாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பியதாகக் கூறப்படும் 'ரண் மல்லி' என்ற நபர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஹரக் கடாவின் போதைப்பொருளை நாட்டுக்குள் விநியோகித்தவர் என்றும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு நடவடிக்கை
மேல் மாகாண வடக்கு குற்றத்த தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும், தங்காலை பிரிவுக்குட்பட்ட சில பொலிஸ் நிலைய அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, 329 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கை தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பிரதான பொலிஸ் பரிசோதகர் லிண்டன் சில்வாவினால் கைது செய்யப்பட்ட தெவிநுவரையைச் சேர்ந்த பிரதான சந்தேகநபர் ஒருவரிடமிருந்து செயற்கைக்கோள் கையடக்கத் தொலைபேசி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருளை கரைக்கு கொண்டு வந்த படகைச் செலுத்தியவர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
தெவிநுவரையில் வசித்து பின்னர் கொழும்புக்கு இடம்பெயர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபா ஒப்பந்தத்தின் பேரில் போதைப்பொருளை கரைக்கு கொண்டு வந்ததாகவும், அதில் 20,000 ரூபா பணம் தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டதாகவும் அந்தச் சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.