யாழ்ப்பாணத்தில் 6.7 சதவீதமானோர் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற தொழிற்சந்தையில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

தொழில் வாய்ப்பின்மை
மேலும் தெரிவிக்கையில், நாடளாவிய ரீதியில் தொழில் வாய்ப்பின்மையை எடுத்துக்கொண்டால், அது சுமார் 3.4 சதவீதமாகக் காணப்படுகின்றது. ஆனால், யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அது சுமார் 6.7 சதவீதமாக உள்ளது.
எனவே, யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த எமது இளைஞர், யுவதிகளுக்கு மேலும் அதிகளவிலான தொழில் வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு இருக்கின்றது. தொழில் வாய்ப்பின்மை என்பது வெறுமனே ஒரு புள்ளிவிவரம் அல்ல
அதேவேளை, தொழிலாளர் பங்கேற்பைப் பார்க்கும்போது, ஆண்களில் சுமார் 68 சதவீதத்தினர் தொழிலில் ஈடுபட்டுள்ள நிலையில், பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு சுமார் 32 சதவீதமாகவே காணப்படுகின்றது. எனவே, பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரிப்பதும், அவர்களின் திறமைகளையும் ஆற்றல்களையும் பொருளாதார வளமாக மாற்றுவதும் எமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.
இந்த நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு இளைஞரும், யுவதியும் தொழில் வாய்ப்பின்றி இருக்கக்கூடாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் கல்வித் தகுதிக்கும், திறமைக்கும், ஆற்றலுக்கும் பொருத்தமான தொழில் வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஒவ்வொருவரும் பொருளாதார ரீதியாக வலுவடைந்து, கௌரவத்துடனும் சுயமரியாதையுடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
அரசுத் துறைக்கு ஒரு இலட்சத்து பன்னிரண்டாயிரத்திற்கும் அதிகமானவர்களை புதிதாக இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளற்ற நிர்வாகத்தை உருவாக்குவதுடன், அரச வளங்களை சிக்கனமாகவும் பொறுப்புடனும் பயன்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாக உள்ளது என மேலும் தெரிவித்தார்.