சுவிட்சர்லாந்தில் வீட்டு வேலையாட்களை கொடுமைப்படுத்திய இந்துஜா குடும்பத்துக்கு 4 வருட சிறை
வீட்டுப் பணியாளர்களை துன்புறுத்திய வழக்கில், இந்துஜா குடும்பத்தினருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில், அசோக் லேலண்ட், இன்டஸ்இண்ட் வங்கி போன்றவற்றின் உரிமையாளர்களான இந்துஜா குழுமம் ஓட்டோ மொபைல், வங்கி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், பொழுதுபோக்கு, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது.
இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதா ஆகியோல் சுவிட்சர்லாந்தில் வசிக்கின்றனர்.
இவர்கள் சட்டவிரோதமாக தங்கள் வீட்டில் இந்திய வேலையாட்களை பணியமர்த்தி, அவர்களுக்கு குறைந்த ஊதியம் வழங்கியதாகவும், அதிகளவு நேரம் வேலை செய்ய மிரட்டுவதாகவும் சுவிட்சர்லாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டது. அதில் இந்துஜா குடும்ப உறுப்பினர்களான பிரகாஷ் மற்றும் அவரது மனைவி கமால் இருவருக்கும் தலா நான்கு ஆண்டுகள் ஆறு மாதங்களும், அவரது மகன் அஜய் மற்றும் அவரது மனைவி நம்ரதாவுக்கு தலா நான்கு ஆண்டுகளும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் மீது பதியப்பட்ட மனிதக் கடத்தல் தொடர்பான வழக்கை மட்டும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, “இந்துஜா குடும்பத்தினர் தங்கள் வீட்டு வளர்ப்பு நாய்க்கு நாள் ஒன்றுக்கு 23.51 பிராங்க் செலவு செய்கின்றனர்.
அதே சமயம், வீட்டுப் பெண் பணியாளருக்கு நாளொன்றுக்கு 18 மணி நேரம் வேலை செய்வதற்கு 7 பிராங்க் மட்டுமே வழங்குகின்றனர். ஊழியர்களின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து அவர்களை மிரட்டி வேலை வாங்குகின்றனர்” என்று எதிர்தரப்பு சட்டத்தரணி வாதிட்டிருந்தார்.