முடிவுக்கு வரவுள்ள போர் நிறுத்தம்; இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை; அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே அறிவிக்கப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், பாகிஸ்தானில் நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட அமைதி பேச்சுவார்த்தையை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.
அமெரிக்காவின் அளவுக்கு அதிகமான கோரிக்கைகள் மற்றும் யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 22-ம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள போர்நிறுத்த ஒப்பந்தம்
அரபிக்கடலில் ஈரானிய சரக்கு கப்பல் மீது அமெரிக்க கடற்படை நடத்திய தாக்குதல் மற்றும் தொடரும் கடல்சார் முற்றுகை ஆகியவை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கா ஒருபுறம் மிரட்டல் விடுத்துக்கொண்டு, மறுபுறம் பேச்சுவார்த்தை என நாடகமாடுவதாக ஈரான் சாடியுள்ளது. கடல்சார் முற்றுகையை விலக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தை சாத்தியம் என்பது ஈரானின் முதன்மை நிபந்தனையாக உள்ளது. மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த அமைதி ஒப்பந்தம் குறித்து இன்னும் நம்பிக்கையுடன் உள்ளார்.
ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான உயர்நிலை குழுவை அவர் பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளார். ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்க தவறினால், அந்த நாட்டின் உள்கட்டமைப்புகள் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அவர் மீண்டும் எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலக நாடுகளும் அச்சத்தில் உள்ளன.