டக்ளஸால் அதிகரிக்கும் பிரச்சினை: வெளிவிவகார அமைச்சர் தலையிட வலியுறுத்தல்!
தமிழக - வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து செல்வதனால் இவ்விடயத்தை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) கையாள வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் (Charles Nirmalanathan) வலியுறுத்தினார்.
இதேவேளை தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் டக்ளஸ் தேவானாந்தாவின் (Douglas Devananda) சில அணுகுமுறைகள் காரணமாக தமிழக-வடக்கு மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக - வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளை சுமூகமாக கையாளக்கூடிய அளவிற்கு தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சரிடம் திறமை இல்லை எனவும் தெரிவித்தார்.
நேற்றைய தினம் புதன்கிழமை (09-03-2022) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இதனை வலியுறுத்தினார்.
அவர் மேலும் கூறுகையில்,
இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகு மீன்பிடியால் வடக்கு,கிழக்கு மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக தொடர்ச்சியாக பாராளுமன்றத்தில் கதைத்த போது, இந்திய பிரதமருடன் நாங்கள் கதைக்கின்றோம், பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கின்றோம் என பல தடைவைகள் கடற்தொழில் அமைச்சர் இங்கு வாக்குறுதி வழங்கியிருந்தபோதும் அதற்கான எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை.
இந்திய மீனவர்களின் இழுவை மடிப்படகு மீன்பிடி பிரச்சினையில் எமது மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தற்போதைய கடற்தொழில் அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாக சில பிரச்சினைகள் அங்கு உருவாகின்றன.
இவரின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆகவே இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் கையாளவேண்டும். முன்பு கடற்தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர இருந்தபோதும் இப்படியான பிரச்சினைகள் வந்தன.
இருப்பினும் அவர் சரியான முறையில் கடற்படையுடன் அணுகி அந்தப்பிரச்சினைகளை ஓரளவுக்கு கட்டுப்படுத்தியிருந்தார். எமது மீனவர்கள் மீன்பிடிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்.
ஆனால் தற்போதுள்ள கடற்தொழில் அமைச்சரிடம் அந்த திறமை இல்லை.மீனவர்கள் எதிராக கதைத்தால் அந்த நிர்வாகத்தை மாற்றுகின்றார்.கடற்தொழில் அமைச்சர் இந்த பிரச்சினையை தீர்த்து வைக்கக்கூடிய நிலைமையில் இல்லை.
இந்நிலையில் தான் இந்தப் பிரச்சினையை வெளிவிவகார அமைச்சர் கையள வேண்டுமென கோருகின்றேன். கடற்தொழில் அமைச்சரின் அணுகுமுறை காரணமாகத்தான் வடக்கு மீனவர்களின் பிரச்சினை மேலும் மேலும் அதிகரித்து செல்கின்றது என்றார்.