கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக்கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான “ஐஎன்எஸ் வேலா” என்ற நீர் மூழ்கிக் கப்பல், உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்த கப்பலுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு ஏற்ப வரவேற்பு அளித்தனர்.
ஐஎன்எஸ் வேலா என்பது 67.5 மீ நீளமுள்ள நீர்மூழ்கிக் கப்பலாகும், 53 பேர் கொண்ட பணியாளர்களை கொண்ட இதற்கு கமாண்டர் கபில் குமார் தலைமை தாங்குகிறார்.
நீர்மூழ்கிக் கப்பல் கொழும்பில் தங்கியிருக்கும் போது, இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நடவடிக்கைகளில் அதன் குழுவினர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் செயல்பாட்டு அம்சங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, இலங்கை கடற்படையின் பணியாளர்கள் அதனை பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் நாட்டில் உள்ள சில சுற்றுலாத் தலங்களை ஆராய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு, ஐஎன்எஸ் வேலா நவம்பர் 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படும்.