இலங்கையை வந்தடைந்தார் இந்திய அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட தூதுவராக வருகை தந்துள்ள அவர், அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் 'சாகர் பந்து' (Operation Sagar Bandhu) மனிதாபிமான உதவித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் அனர்த்த நிவாரணப் பணிகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், இலங்கையின் மீட்சிப் பணிகளுக்காக இந்தியா சார்பில் விசேட ஒத்துழைப்புத் தொகுப்பை அவர் அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் 'அயல்நாட்டிற்கு முன்னுரிமை' கொள்கையின் அடிப்படையில், இலங்கையின் இக்கட்டான தருணத்தில் இந்தியாவின் ஆதரவை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளது.
முன்னதாக, சூறாவளி பாதிப்பின் போது இந்திய இராணுவ மருத்துவக் குழுக்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.