43 இந்திய மீனவர்கள் கைது: டக்ளஸுக்கு அழுத்தம் கொடுக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள்
அத்துமீறி எல்லை தாண்டி வந்து சட்ட விரோதத் தொழிலான அடிமடி இழுவை வலைத் தொழிலில் ஈடுபட்டு வந்த சுமார் 6 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 43 இந்தியக் கடற்றொழிலாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாழ்வாதாரத்திற்கும் கடல் வளத்திற்கும் பாதிப்பினை தொடர்ச்சியாக ஏற்படுத்தி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு வடக்கு கடற்றொழிலாளர்களினால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு (Douglas Devananda) அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பருத்தித்துறை முனை மற்றும் கொட்டடி பிரதேசங்களுக்குச் சென்று பிரதேச மக்களை சந்தித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இராஜதந்திர ரீதியில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற சமகாலத்தில் சட்ட ரீதியான நடவடிக்கைகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளமையினால் பொறுமையாக இருக்குமாறு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியக் கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற் படையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
