இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய இராணுவத் தளபதி
இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
தமது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜெனரல் திவேதி இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட சிரேஸ்ட இராணுவ மற்றும் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை அவர் முன்னெடுக்கவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் முகாமைத்துவக் கல்லூரியின் அதிகாரிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.
இது இலங்கையுடனான பாதுகாப்பு கல்வி மற்றும் தொழில்முறை இராணுவப் பரிமாற்றங்களில் இந்தியாவின் வலுவான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், பரஸ்பர நம்பிக்கையை வளர்த்தல் மற்றும் இயங்குதிறனை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் அர்ப்பணிப்பை இராணுவத் தளபதியின் இந்த இலங்கை விஜயம் மீண்டும் உறுதிப்படுத்துவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.