எமக்கு கிடைத்த பாரிய வெற்றி இதுவாகும்: கொடியை பறக்கவிடுவோம்! உதய கம்மன்பில
இந்தியாவின் கட்டுப்பாட்டில் பல வருடங்களாக இருந்த திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 12-01-2022 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தில் இலங்கை கொடியை பறக்கவிடுவோம் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த எண்ணெய் களஞ்சியசாலை அபிவிருத்தி தொடர்பில் புதிய உடன்படிக்கை ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் செல்லவுள்ள நிலையில் நேற்று கூடிய அமைச்சரவையில் அது குறித்து அமைச்சர் உதய கம்மன்பில தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த நிலையில் திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் இலங்கை வசமாக்கும் வேலைத்திட்டம் குறித்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தை இந்தியாவிற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொய்யான செய்திகளை பரப்பிக்கொண்டுள்ளனர். ஆனால் வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கைகளுக்கு இந்த எண்ணெய் களஞ்சிய நிலையத்தை பெற்றுக்கொடுத்துள்ளோம்.
இதேவேளை, இப்போது நாம் முன்னெடுக்கவுள்ள இரு தரப்பு அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் ஊடாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள 24 எண்ணெய் குதங்கள் மற்றும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனம் மூலமாக நிருவகிக்கப்படும் 61 எண்ணெய் குதங்களையும் இணைத்து 85 எண்ணெய் குதங்களின் நிருவாக அதிகாரம் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வசமே இருக்கும்.
இலங்கை ஐ ஒ.சிக்கு 14 எண்ணெய் குதங்களே இருக்கும். எனவே இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த திருகோணமலை எண்ணெய் குதங்களை மீண்டும் எமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளமை எமக்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.
அதேபோல் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் குறித்த எண்ணெய் களஞ்சிய நிலையத்திற்கு சென்ற எமது அதிகாரிகளை இந்திய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், இந்தியாவின் நேரடி தலையீட்டில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளை கைது செய்தனர்.
இச் சம்பவம் இராஜதந்திர மட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இவ்வாறு தண்டிக்கப்பட்ட எமது அதிகாரிகள் மூலமாகவே எதிர்வரும் 12 ஆம் திகதி திருகோணமலை எண்ணெய் களஞ்சிய நிலையத்தில் இலங்கைக்கொடியை பறக்கவிடுவார்கள் என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.