ட்ரம்ப் – மோடி பங்கேற்கும் குவாட் மாநாடு ; சீனாவை எதிர்க்குமா இந்தியா? சமநிலைப் பாதையில் இலங்கை
இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழலுக்கு மத்தியில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் (QUAD) அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 17ஆம் திகதி பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கவுள்ள இந்த மாநாட்டில், சீனாவின் பிராந்திய ஆதிக்கம், கடல்சார் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்கள் ஆராயப்படவுள்ளன.

அமெரிக்காவின் மாறிவரும் வெளியுறவுக் கொள்கை மற்றும் வர்த்தக அழுத்தங்களுக்கு மத்தியில், சீனாவுடன் நேரடி இராணுவ மோதலில் ஈடுபடுவதைவிட பிராந்திய ஒத்துழைப்புக்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருவதாக அரசியல் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில், குவாட் அமைப்பை சீனாவுக்கு எதிரான இராணுவக் கூட்டணியாகப் பயன்படுத்துவதைவிட பொருளாதார மற்றும் தொழில்நுட்பப் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்துவதாகக் கூறப்படுகிறது.
மறுபுறம், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந்துள்ள இலங்கை, அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடன் சமநிலையான இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டிய சூழலில் உள்ளது.
அமெரிக்காவுடனான ஏற்றுமதி வர்த்தகம், சீனாவின் முதலீடுகள் மற்றும் இந்தியாவுடனான பிராந்தியப் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, எந்தவொரு வல்லரசு அணியிலும் முழுமையாக இணையாமல் அணிசேராக் கொள்கையைப் பின்பற்றுவதே இலங்கையின் நலனுக்கு உகந்ததாக அமையும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதனால், எதிர்வரும் குவாட் மாநாடு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையிலும், இலங்கையின் எதிர்கால வெளியுறவுக் கொள்கையிலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.