லார்ட்ஸில் இங்கிலாந்து அணியைக் கதறவிட்ட இந்தியா அணி...151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கடந்த ஓகஸ்ட் 12 ஆம் திகதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்தன. பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது.
இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 272 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 60 ஓவர்களில் இந்த ரன்னை எட்ட வேண்டும் என்பதால் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து வீரர்கள் ரன் எடுக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 51.5 ஓவர்களில் அந்த அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக சிராஜ் 4 விக்கெட்டுகளையும், பும்ரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.