இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஒக்டோபர் முதாலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,53,063 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 44,741 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து 44,741 சுற்றுலாப் பயணிகள்
இந் நிலையில், இது மொத்த வருகையில் 29.2% ஆகும். மேலும், குறித்த காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 12,128 பேரும், ரஷ்யாவில் இருந்து 10,450 பேரும், சீனாவில் இருந்து 10,408 பேரும், ஜேர்மனியில் இருந்து 8,950 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 7,226 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 29 ஆம் திகதி வரையிலான மொத்த சுற்றுலாப் பயணிகள் வருகை 18,78,557 ஆகும்.
நாட்டுக்கு வந்த சுற்றுலா பயணிகளில் இந்தியாவில் இருந்து 4,20,033 சுற்றுலாப் பயணிகளும், ரஷ்யாவில் இருந்து 1,32,594 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 1,74,021 பேரும் வருகை தந்ததாக ஸ்ரீலங்கா சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.