காலியில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியம்
காலி பிரதேசத்திற்கு வருகைதரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு, காலி கோட்டையிலும் நகரிலும் சுற்றித்திரியும் மாடுகள் மற்றும் நாய்களால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சுற்றுலாத்துறையில் முன்னேற்றம் காணும் போது, இதுபோன்ற பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டுக்கு வருகைதந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,682,482 ஆகும்.
நவம்பர் மாதம் முதல் 10 நாட்களில் மட்டும் நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 61,767 ஆகும்.
குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், ஐரோப்பிய சுற்றுலா பயணிகளின் வருகை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை கணித்துள்ளது.
மேலும் அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
இவ்வாறான நிலையில், நாட்டின் முன்னணி சுற்றுலாத் தலமாக விளங்கும் காலி சுற்றுலாப் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
காலி கோட்டை மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் திரியும் கால்நடைகள் மற்றும் நாய்களால் ஏற்படும் அச்சுறுத்தலாகும். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.