சீரற்ற காலநிலை; நால்வர் உயிரிழப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதோடு கடும் மழை, வெள்ளம் மற்றும் பலத்த காற்று உள்ளிட்டவை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மோசமான வானிலை காரணமாக 1,444 குடும்பங்களைச் சேர்ந்த 5,790 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதத்த ரணசிங்க தெரிவித்தார்.
இந்த காலப்பகுதியில் மூன்று வீடுகள் முழுமையாகவும் 409 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், நிலவும் காலநிலையில் அடுத்த சில நாட்களில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.