புலம்பெயர் தொழிலாளர்களின் வருமானம் ; இலங்கை பொருளாதாரத்தில் புதிய திருப்பம்
2025ஆம் ஆண்டிற்கான இலங்கையின் தற்போதைய கையிருப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மேலதிகத்தைப் பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் இந்த மேலதிக நிலை காணப்பட்டமை பொருளாதாரத்திற்கு ஒரு சாதகமான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பிய வருமானம் 2025இல் 8 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது.
இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 22.8 சதவீத வளர்ச்சியாகும். அத்தோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகை 2018ஆம் ஆண்டை விட 15.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

எனினும், அதனூடாகக் கிடைத்த வருமானம் 1.6 சதவீதத்தால் மாத்திரமே உயர்ந்துள்ளது. ஏற்றுமதி வருமானம் அதிகரித்த போதிலும், இறக்குமதிகள் அதிகரித்தமையால் வர்த்தகப் பற்றாக்குறை 7.9 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக, வாகன இறக்குமதிக்காக 2025இல் மாத்திரம் 2.05 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2025 முடிவில் 6.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.
அத்தோடு, 2025ஆம் ஆண்டில் ரூபாயின் பெறுமதி ஓரளவு வீழ்ச்சியடைந்த போதிலும், 2026 ஜனவரியில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் 0.2 சதவீதத்தினால் வலுவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.