கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆலயமொன்றில் தீ மிதிப்பு; மூவருக்கு நேர்ந்த கதி
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பு - செங்கலடி ஐயங்கேணி வைரவர் ஆலயத்தில் மக்களை ஒன்று திரட்டி நேற்று தீ மிதிப்பு சடங்கு நடத்திய 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த ஆலயத்தின் தலைவர் செயலாளர் உட்பட 3 பேருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ மிதிப்பு இடம்பெறுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸாருடன் இணைந்து நேற்று குறித்த ஆலயத்தை முற்றுகையிட்டப்பட்டது.
இதன்போது சுகாதார நடைமுறைகளை மீறி ஆலயத்தில் மக்களை ஒன்றிணைத்தமை மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது மீறிச் செயற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆலய தலைவர், செயலாளர், பொருளாளர் உட்பட மூவருக்கு எதிராக பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
அதோடு அவர்களை எதிர்வரும் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு விடுவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை களுவங்கேணி மாரியம்மன் ஆலய உற்சவத்தில் சுகாதார சட்டத்தை மீறிப் பங்கேற்ற 114 பேருக்குக் கடந்த வியாழக்கிழமை கோவிட் தொற்று கண்டறியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.