வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவரை மக்கள் மடக்கி பிடிப்பு
வவுனியாவில் முச்சக்கர வண்டியில் மாடு திருடிய இருவரை நாடாளுமன்ற உறுப்பினரும், ஊர் மக்களும் இணைந்து மடக்கிப் பிடித்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
வவுனியா, சமயபுரம் பகுதியில் நேற்று (04.06) நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியை மக்கள் மறித்துள்ளனர்.
முச்சக்கர வண்டிக்குள் நான்கு கால்களும் கட்டப்பட்டு தலைகீழாக மாட்டை வைத்து அதனை ரபர் சீற்றால் சுற்றி கடத்திச் செல்வதை அவதானித்துள்ளனர்.
உடனடியாக பொலிஸாருக்கும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருக்கும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனுக்கும் தகவல் வழங்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து இரு பகுதியினரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர்.
பொலிஸாரால் கைது
மாட்டை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்றவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டதுடன், மாட்டை இறைச்சிக்காக வெட்ட கொடுப்பதற்கு கொண்டு சென்றதை அவர் மக்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரவு ஒன்றரை மணிவரை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஊர்மக்களுடன் இணைந்து மாடு களவெடுப்பதற்கு துணை நின்ற மற்றும் ஒரு நபரை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து கொண்டு செல்லப்பட்ட மாடு நெளுக்குளம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.