சிறைத் தண்டனை அனுபவிக்கும் பியங்கர ஜயரத்ன அச்சுப் பிரிவில் நியமனம்
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன, சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் (Printing Section) பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
அரசியல்வாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர்களில் பலர் சிறைச்சாலையின் அச்சுப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு நியமிக்கப்படுவது வழமையாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக, ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபாய் செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பியங்கர ஜயரத்னவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளி என கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை ஏழு ஆண்டுகளில் அனுபவிக்கும் வகையில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல் தீர்ப்பளித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் அவர், சிறைச்சாலையின் அச்சுப் பிரிவில் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.