இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை!
அடுத்த இரண்டு வாரங்களில் நாட்டின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கும் என்பதால், சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டெல்டா கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவுவதால் நாட்டு மக்கள் அதற்குப் பலியாகும் ஆபத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1.5% பேர் உயிரிழந்து விட்டதாகவும், பெரும்பாலானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க தேவையான வழிகாட்டி ஒன்றை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி செலுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் என்றும் விரைவில் தடுப்பூசி செலுத்துமாறும் குறித்த அறிவித்தலில் முதலாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளைத் தவிர ஏனைய விடயங்களுக்காக வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் மற்றும் ஏனைய விழாக்களில் கலந்து கொள்வதை முற்றாக நிறுத்துமாறும் மற்றும் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
நாட்பட்ட நோய் இருந்தால், வேலைக்கு மாத்திரம் வீட்டை விட்டுச் செல்லலாம் என்றும் அடிக்கடி அத்தியாவசியம் இன்றி வீட்டை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்துகிறது.
அடிக்கடி சவர்க்காரம் இட்டு கைகளைக் கழுவுதல், அறை, மண்டபங்கள், மின் உயர்த்தி மற்றும் போக்குவரத்து போன்ற பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் இரண்டு மீற்றர் இடைவெளியைப் பேணவும் என்றும் சுகாதார வழிகாட்டிகளைப் பின்பற்றவும் என்றும் அதில் அறிவித்துள்ளனர்.
தங்களின் மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கையை மற்றவர்களிடம் பொறுப்பு கொடுக்காமல் , நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.
தங்கள் குடும்பங்களுக்கு நெருக்கமானவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்றும் அரசாங்கம் வலியுறுத்துகிறது.
நாட்டில் தற்போதைய நிலைமையில் கடந்த வாரத்தில் மாத்திரம் நாட்டில் கொரோனா தொற்றால் 576 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அதில் 453 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் 32 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட 132 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் டெல்டா கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்றும் ஒட்சிசன் தேவைப்படும் மற்றும் வைத்தியசாலையில் அத்தி யாவசிய சிகிச்சைகளைப் பெறும் கொரோனா தொற்றாளர்க ளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது என்றும் இதன் விளைவாக சுகாதாரத் துறை பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்றும் அதில் அறிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதோடு, மருத்துவமனையின் திறனை மீறியுள்ளது என்றும் கொரோனா தொற்றுக்குள்ளான சுகாதார ஊழியர்கள் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்தது என்றும் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்றால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள சில வைத்தியசாலைகளில் பிணவறைகளில் சடலங்கள் குவிந்து காணப்படகின்றன.
அதன்படி, வட கொழும்பு, ராகம வைத்தியசாலை, தென் கொழும்பு, களுபோவில பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை வைத்தியசாலைகளில் இவ்வாறான நிலை மிக அதிகமாக காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் ராகம வைத்தியசாலையில் குவிந்து கிடந்த 26 சடலங்களின் இறுதிச் சடங்குகள் வத்தளை, பியகம , ஜா-எல, கந்தானை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தகனச்சாலைகளில் இடம்பெறவுள்ளதாகத் சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.