நாட்டில் கால்நடைகள் வளர்ப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!
பனி மற்றும் மழைக்காலங்களில் கோழி, ஆடு, மாடுகள் போன்றவற்றை வெட்ட வெளியிலோ, வயல்காட்டிலோ காலையில் மேய விடக்கூடாது. ஏனென்றால், புற்களின் நுனி பகுதியில் கல்லீரல் புழு, லார்வா புழுக்கள் அதிகளவில் தென்படும். இவற்றை மேயும் கால்டைகளுக்கு நோய்கள் ஏற்படும்.
பனி, மழைக்காலம் என்றால் மாடுகளுக்கு நிமோனியா காய்ச்சல் வரும். நுரையீரல் பாதிக்கும். எனவே முன் எச்சரிக்கையுடன் மாடுகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
கால் நடைகளை குளிர் காலத்தின் போது, திறந்த வெளி பட்டியில் அடைக்காமல் கூரைக்குள்ளோ அல்லது நான்கு புறமும் பனிச்சாரல் வீசாவண்ணம் பிளாஸ்டிக்தார்ப்பாய் போட்டு மூடி பாதுகாத்தால் பாதிப்பு இருக்காது.
கால்நடைகளை வளர்ப்பவர்கள் மழை, வெயில் காலங்களில் கூண்டில் அடைத்தாலும், கொட்டகையில் அடைத்தாலும் தார்ப்போய் போட்டு மூடினால் வெது வெதுப்பான சூழல் உருவாக்கப்படும்.
பசு தங்குமிடங்கள் தடிமனான பாலிதீன் திரைச்சீலைகள் அல்லது ‘டார்பாலின்’ ஆகியவற்றால் மூடப்பட்டால் குளிர்ந்த காற்று நுழையாது. தேவையானால் நெருப்பு மூட்டி குளிரை குறைக்கும் முயற்சிகள் தேவை. கறவை மாடுகளில், கடுமையான குளிரில் மடி பாதிக்கப்படலாம்.
குளிர் காலங்களில் வைக்கோல் "மெத்தை" குளிரில் இருந்து பாதுகாக்கும். தரையில் அடர்த்தியான வைக்கோல் போடலாம். குறிப்பாக குளிர் நாட்களில், கன்றுகளுக்கு கூடுதலாக போர்வைகள் தேவைப்படலாம்.
கன்றிற்குத் தேவையான படுக்கை வசதி அமைத்து அதை குளிரிலிருந்து பாதுகாக்க வேண்டும். கொட்டகையை சுத்தமாக வைத்துக்கொள்வதன் மூலம் தொற்றுநோய் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
குளிர்கால தீவன மேலாண்மை:
குளிர் காலத்தில் பசும்புல் அதிகமாக அளிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் உலர் தீவனங்கள் அளிக்க வேண்டும். அசோலா பாசியை தினமும் ஒரு மாட்டிற்கு 2 கிலோ அளவில் அளிக்கலாம். இதன் மூலம் புரதச்சத்து தேவையை ஈடுசெய்யலாம்.
குளிர்காலத்தில் மாடுகள் பராமரிப்பு:
குளிரில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தால் பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். குளிர் காலம் தொடங்குமுன் பேன் பரவலைத் தடுக்க, மருந்து நடவடிக்கைகளைச் செய்யவேண்டும்.
குளிர் காலத்தில் குளம்புசிதைவு நோய் வருவதால் கொட்டகையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதற்கு கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இந்த தகவலை முகநூலில் Nishanthi Prabakaran பதிவிட்டுள்ளார்.
