கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேரோடும் ஆலயமான கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவமானது கொரோனா தொற்று காரணமாக எந்தவொரு நிகழ்வுகளும் நடாத்த முடியாது என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து பட்டிப்பளை பிரதேச செயலகத்தில் கொக்கட்டிச்சோலை ஆலய நிர்வாகம் விடுத்த மீள் பரிசீலனையின் நிமிர்த்தம் கடந்த செப்டம்பர் 3ஆம் திகதி எடுக்கப்பட்டது.
அந்த முடிவுகளின் படி, நாட்டின் சூழ் நிலையைக் கருத்திற் கொண்டு பணியாட்கள் 15 பேர் மாத்திரம் ஆலயத்தினுள் உட் சென்று எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி கொடியேற்றமும் ஸ்நபன கிரிகைகளும் பூசைகளும் ஆலயத்தினுள் நடைபெற்று உள் வீதி திருவிழா மாத்திரம் வலம் வந்து எதிர்வரும் செப்டம்பர் 27 ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுகள் தேரோட்ட உற்சவ நிகழ்வாக அமையாது எனவும், நாட்டில் நிலவும் கொரோனா நோய் தொற்று மற்றும் மரணங்களில் இருந்து மக்கள் விடுபட்டு நல்வாழ்வு வாழ்வதற்காகவும் இந்த செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மக்களின் நலன் கருதி எவரும் எக் காரணம் கொண்டும் குறித்த ஆலய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது எனவும், தங்களின் வீடுகளிலே இருந்து இறை வழிபாடுகளை செய்யுமாறும் ஆலய நிர்வாக சபையினர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.