யாழ் மக்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இம்மாதம் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ். மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை
இந்த வருடத்தில் யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. எனினும், யாழ். மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்கவிருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது.
டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ஆம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது.
இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடைபெறும்.
பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன.
யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி சகல வணக்கத்தலங்களிலும், 15ஆம் திகதி சகல அரச நிறுவனங்களிலும், 16, 17ஆம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன.
இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும் வேலைத்தலங்களிலும் கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப் பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும்.
இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக் குழுக்கள் வீடுகளையும் வேலைத்தளங்களையும் கல்வி நிறுவனங்களையும் வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர்.
இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர். எனவே, யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரையும் வேண்டுகிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.