மின்சார சபை ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் நாளைய தினத்துக்குள் குறித்த விண்ணப்பங்களை மீளப்பெற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ. குமார, இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
2025 ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதிக்கு முன்னர் சுயவிருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தாலும், அந்த விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்டு புதிய நிறுவனத்துடன் இணையவுள்ள ஊழியர்களுக்கு இந்த சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

எனினும், நாளைய தினத்துக்குப் பின்னர் அந்த விண்ணப்பங்களை மீளப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாளைய தினத்துக்குள் பொது முகாமையாளருக்கு கிடைக்கும், சுயவிருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை மீளப்பெறும் கோரிக்கைகளை மாத்திரம் அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினத்துக்கு பின்னர் அத்தகைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதைத் தவிர்க்குமாறு, அனைத்து பிரிவுத் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.எஸ்.ஐ.குமார தெரிவித்துள்ளார்.