மத்திய கிழக்கு நெருக்கடியால் மீன் ஏற்றுமதிக்கு ஏற்பட்ட தாக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.
எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.