வரவு - செலவு திட்டத்தை நிறைவேற்றுவதில் அரசாங்கத்திடம் imfஇன் செயற்திட்டத்தலைவர் வலியுறுத்து
இலங்கை வரி விலக்குகள் அளிப்பதைத் தவிர்க்கவேண்டும் எனவும், விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்றவாறு அமைந்திருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு, செலவுத்திட்டத்தைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தவேண்டும் எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்டம் குறித்த மூன்றாம் கட்ட மீளாய்வு தொடர்பில் எட்டப்பட்ட உத்தியோகத்தர் மட்ட இணக்கப்பாட்டுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது.
அதனையடுத்து வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத் தலைமையகத்தில் இலங்கை நேரப்படி நேற்று திங்கட்கிழமை மு.ப 8.30 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான செயற்திட்டத்தலைவர் பீற்றர் ப்ரூயர்,
பிரதித்தலைவர் கற்ஸியரினா ஸ்விரிட்ஸென்கா மற்றும் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்த்தா டெஸ்ஃபாயே வோல்ட்மைக்கல் ஆகியோர் கலந்துகொண்டு, இலங்கையின் சமகால பொருளாதார நிலைவரம் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.
அதன்படி கடந்தகால பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை குறிப்பிட்டுக்கூறத்தக்களவு மீட்சியடைந்திருக்கும் நிலையில், தற்போது வரி வருமானத்தை அதிகரிப்பதிலும், இலக்கிடப்பட்ட சமூகப்பாதுகாப்பு செயற்திட்டங்களை மேம்படுத்துவதிலும்,
பொதுநிதியைத் திறம்பட முகாமை செய்யக்கூடியவகையில் செலவினங்களை ஒழுங்குபடுத்துவதிலும் விசேட கவனம் செலுத்தவேண்டும் என பீற்றர் ப்ரூயர் வலியுறுத்தினார்.
அதேவேளை மின்கட்டணத்தைப் பொறுத்தமட்டில் செலவினத்தை ஈடுசெய்யக்கூடியவாறான கட்டண நிர்ணய முறைமையைப் பின்பற்றுவது அவசியம் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜனவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட மின்கட்டணக்குறைப்பின்போது இம்முறைமை பின்பற்றப்படவில்லை எனக் கரிசனை வெளியிட்டார்.
அதுமாத்திரமன்றி எதிர்வருங்காலத்தில் மீண்டும் மின்கட்டணத்தை நிர்ணயிக்கும்போது, அது செலவினத்தை ஈடுசெய்யக்கூடிய விதத்தில் அமையவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச்செயற்திட்ட நிபந்தனைகளுக்கு ஏற்ப அமைந்திருப்பதாகவும், இதுகுறித்து தாம் உன்னிப்பாக அவதானித்துவருவதாகவும் பீற்றர் ப்ரூயர் குறிப்பிட்டார்.