சமனல இயற்கை சரணாலயத்தில் சட்டவிரோத மதுபானம் தயாரித்த ஒருவர் கைது
மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில், கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு, குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒன்றரை நாட்கள் அங்கேயே தங்கி கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான தயாரிப்பு இடத்தை முற்றுகையிட்டனர்.

இதன் போது, 210 லீட்டர் கசிப்பு அழிக்கப்பட்டதுடன், சந்தேக நபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீட்டர் ஸ்பிரிட் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், குறித்த தோட்டத்திலேயே வசிக்கும் 69 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரை பொலிஸ் பிணையில் விடுவித்து, அவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தலைமை காவல் ஆய்வாளர் புஷ்பகுமார தெரிவித்தார்.