தமிழரசுக்கட்சி பதில் செயலாளரை துயில் எழுப்புங்கள்!
உள்ளுராட்சி சபையில் வட்டாரரீதியான தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஒருவர் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டால் அந்த உறுப்பினரை நீக்கி புதிய உறுப்பினரை நியமிக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு என ராமசாமி துரைரத்தினம் முகநூலில் குறித்த கருத்தை பதிவிட்டுள்ளார்.
விருப்பு வாக்கு தேர்தல் முறையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரை நீக்குவது இயலாத காரியமாக இருந்த போதிலும் வட்டாரரீதியான தேர்தல் முறையில் அது மிக இலகுவானதாகும்.
வட்டாரத்தில் உள்ள மக்கள் கட்சிக்குத்தான் வாக்களிக்கிறார்கள். தனி நபருக்கு அல்ல. கடந்த காலங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆனந்தசங்கரி சில உறுப்பினர்களை இப்படி பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் புளொட் சார்பில் வியாழேந்திரனால் நியமிக்கப்பட்ட இரு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இவர்கள் இருவரையும் தமிழரசுக்கட்சி செயலாளரால் பதவி நீக்கம் செய்ய முடியும்.
ஆனால் இந்த விடயத்தில் விவேகமாகவும் உறுதியாகவும் செயற்படும் ஆற்றல் தமிழரசுக்கட்சி தலைவர் செயலாளருக்கு இருக்கிறதா என்பது கேள்வி குறி.
மட்டக்களப்பு மாநகர சபையில் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இருவரையும் நீக்கி விட்டு அவர்களுக்கு பதிலாக புதியவர்களை தமிழரசுக்கட்சி செயலாளர் நியமிப்பாரா? துயில் கொள்ளும் தமிழரசுக்கட்சி தலைவரும் பதில் செயலாளரும் எப்போது எழும்புவார்கள்? அவர்களை துயில் எழுப்பும் பொறுப்பு கட்சி உறுப்பினர்களை சார்ந்ததல்லவா? ராமசாமி துரைரத்தினம் முகநூலில் தெரிவித்துள்ளார்.