இலங்கை கிரிக்கெட்டை திடீரென இடைநீக்கம் செய்த ஐசிசி! இதற்கான காரணம் என்ன?
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உறுப்புரிமையை உடன் அமலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்றைய தினம் (10-11-2023) தடை செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் தமது கடமைகளை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் நிறுவனம் இன்று கூடிய போது குறித்த தீர்மானத்தை எட்டியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகம், அரசியல் தலையீடு ஆகிய காரணங்களே சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மொத்தமாக கலைத்த அரசாங்கம்
இந்திய அணியுடனான அசிய கிண்ண போட்டி மற்றும், உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்தது.
அதையடுத்து, இலங்கை அணியின் படுதோல்விக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகளே காரணம் என விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பகிரங்க அறிக்கை ஒன்றின் மூலம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையடுத்து, இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் தனது ராஜினாமா கடிதத்தைக் கையளித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து, இலங்கை கிரிக்கெட்டிற்கு புதிய இடைக்கால குழுவொன்றை விசேட வர்த்தமானி ஊடாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நியமித்திருந்தார்.
முன்னாள் அணித் தலைவர் அர்ஜுண ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டது.
குறித்த குழு விளையாட்டுத்துறை அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய நியமிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்
இந்த இடைக்கால குழு நியமிக்கப்பட்டமைக்கு எதிராக, இலங்கை கிரிக்கெட் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு மீதான விசாரணைகளை அடுத்து, இடைக்கால குழுவை தற்காலிகமாக இடைநிறுத்த மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சிகள் ஒன்றிணைந்து கொண்டு வந்த தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்டது.
இலங்கை கிரிக்கெட் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் சபைக்கு கொண்டு வரப்பட்டு, நேற்று காலை முதல் விவாதம் இடம்பெற்றது.
விவாதத்தின் பின்னர் நேற்றைய தினம் (09-11-2023) மாலை இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை இன்று தடை செய்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டில் அரசியல் தலையீடா?
இலங்கை கிரிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் பேரவை தடை செய்ததானது, நாட்டிற்கு அபகீர்த்தி என தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.
இலங்கையின் அரசியல் தலையீடு காரணமாக ஏற்படும் நிர்வாக சீர்கேடுக்கு இதுவொரு உதாரணம் என அவர் குறிப்பிடுகின்றார்.
சர்வதேச தரத்திலான அணி ஒன்றை இலங்கை உறுதி செய்தாலும், ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான நம்பிக்கை தற்போது இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான உதவிகளை எதிர்வரும் காலத்தில் சர்வதேச கிரிக்கெட் பேரவை வழங்காது எனவும், அது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.