இனவாதத்துக்கு இடமளியேன்; கொள்கைப் பிரகடன உரையில் ஜனாதிபதி அனுரகுமார!
இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளியேன் என ஜனாதிபதி அனுரகுமார கொள்கைப் பிரகடன உரையில் தெரிவித்தார்.
10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் கன்னி அமர்வில் ஜனாதிபதி கொள்கைப் பிரகடன உரையை தற்போது நிகழ்த்துகின்றார். இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி,
இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை
அனைத்து இன மக்களும் எம்மீது நம்பிக்கை கொண்டு அதிகாரத்தை வழங்கியுள்ளார்கள். அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தலில் ஆதரவளித்த, ஆதரவளிக்காத அனைவரையும் இலங்கை பிரஜைகள் என்றே நான் கருதுவேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த நாட்டில் இனி இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் இடமில்லை என்று ஜனாதிபதி கூறினார். மக்களால் வெறுக்கப்படும் நாடாளுமன்றம் மக்களை ஆள்வதற்கு தகுதியற்றது.
ஆகவே மக்களால் விமர்சிக்கப்படும் பாராளுமன்றம் தோற்றம் பெற இடமளிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் மக்களுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்றும் இந்த பாராளுமன்றம் மக்களின் பரிசோதனையில் சித்தி பெற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி உட்பட அனைவரும் நாட்டின் சட்டத்துக்கு அடிபணிய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய குற்றங்களை முறையாக விசாரணை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துடன் பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.