தாயகம் திரும்பிய யாழ் புலம் பெயர் தமிழருக்கு நேர்ந்த அவலம்; வேதனையுடன் பதிவு
உலக அளவில் அறியப்பட்ட பிரித்தானிய வாழ் புலம்பெயர் தமிழரும், DJ கலைஞரும் தொழில்முனைவோருமான DJ ரொப் ஆர் என அறியப்படும் யாழ்ப்பாணத்தை பின் புலமாக கொண்ட ரொபர்ட் இராஜேஸ்வரன் (Robert Rajeswaran) தான் இலங்கையின் தெற்குக் கடற்கரைப் பகுதியான அஹங்கமவில் இனவெறித் தாக்குதல்களுக்கும் உயிர் அச்சுறுத்தலுக்கும் உள்ளானதாகக் கூறி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இசையை ஒலிக்க வேண்டாம்
இவர், அஹங்கமவில் தான் நடத்தி வரும் உணவகமொன்றில் வைத்து, உள்ளூர் நபர் ஒருவரால் இனரீதியான வார்த்தை பிரயோகத்துக்கு உள்ளானதுடன், பணம் கொடுக்க மறுத்தபோது கழுத்தை அறுப்பதாக அச்சுறுத்தப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
சிங்கள-பௌத்த பெரும்பான்மைப் பகுதியில் தமிழருக்குச் சொந்தமான வர்த்தகத்தை நடத்துவதால் தான் அடிக்கடி இலக்கு வைக்கப்படுவதாகவும், ' புலிகள்' மற்றும் 'பயங்கரவாதி' என்று பலமுறை தாம் அழைக்கப்பட்டதாகவும் அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

தீபாவளி அன்றும் கூட, 'தமிழ் இசையை ஒலிக்க வேண்டாம், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்' என்று அச்சுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த காலத்துக்கு அகதியாக யாழ்ப்பாணத்திலிருந்து லண்டனுக்குச் சென்று, பின்னர் சமாதானமாக வாழும் நோக்கத்துடன் தாயகம் திரும்பிய தான், சமூகங்களுக்கிடையேயான பாலமாக இருக்கவே இந்த உணவகத்தைத் திறந்ததாக ரொப் ஆர் கூறியுள்ளார்.