இன்னும் சில நாட்களில் நான் கைது செய்யப்படலாம்..காரணம் இது தான் ; நாமலின் ஆருடம்
நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம்.
எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

போதைப்பொருள் கொள்கலன்கள்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் போது அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கு கிடையாது. நீதியமைச்சர் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர்களுடனும் அவர் தற்போது முரண்படுகிறார்.
கொழும்பு துறைமுகத்தில் இருந்து ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் இரண்டு தற்போது கைப்பற்றப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் எவ்வித பரிசோதனைகளுமின்றிய வகையில் 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கலன்களில் என்னவிருந்தது என்பது இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை.
நாடு தழுவிய ரீதியில் அரசியல் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளோம். எதிர்வரும் 12 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ள அரசியல் கூட்டத்தை தடுக்க அதற்கு முன்னர் என்னை கைது செய்ய அரசாங்கம் முயற்சிக்கிலாம்.
அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை சுட்டிக்காட்டுவதால் எங்களை நெருக்கடிக்குள்ளாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மக்களுக்காகவே நாங்கள் செயற்படுவதால் மக்களுக்காகவே எந்த சவால்களையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என்றார்.