நான் அவன் அல்ல ; மோசடி குறித்து சபையில் தமிழ் எம்.பியின் விளக்கம்
ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலில் உள்ள பி. இராதாகிருஷ்ணன் நானல்ல. நான் வி. இராதாகிருஷ்ணன் .ஆகவே ''நான் அவன் அல்ல ''என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட எம்.பி.யுமான வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (07) சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
பெயர்ப் பட்டியல்
அவர் அங்கு மேலும் கூறுகையில், தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டாரவினால் பிரதமரிடம் கேட்கப்பட்ட வாய்மூல கேள்வியின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு 2005 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் நிதி வழங்கப்பட்டது பற்றி கடந்த 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
குறித்த பெயர்ப் பட்டியலில் 2006 ஆம் ஆண்டின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான பி. இராதாகிருஷ்ணுகாக திருமதி கே. இராதாகிருஷ்ணனுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
குறித்த அறிவித்தலை அடிப்படையாக கொண்டு தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எனக்கு அவதூறு ஏற்படும் வகையில் பொய்யான செய்திகள் சமூக வலைத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பரவுகின்றன.
ஆனால் அதில் குறிப்பிடப்பட்டுள்ள "பி.இராதாகிருஷ்ணன்" என்னும் பெயர் "பெருமாள் பிள்ளை இராதாகிருஷ்ணன்" ஆக இருக்க வேண்டும் என்றும், அதில் குறிப்பிடப்படுவது "வேலுசாமி இராதாகிருஷ்ணன்" என்ற என்னைப் பற்றியல்ல என்றும், அந்த நேரத்தில் நான் மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினராக இருந்தேன் என்றும், நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் இந்த உயரிய சபைக்கும் நாட்டு மக்களுக்கும் அறிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல் வாய்மூல வினாக்களுக்கான விடைகளையும் எதிர்பார்த்து தனிப்பட்ட உறுப்பினர்களை இலக்காகக் கொண்டு அவதூறுகளை ஏற்படுத்தும் வகையில் வினாக்களையும் விடைகளையும் வழங்குவதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
இதை நிவர்த்தி செய்யுமாறும், பொறுப்பானவர்களை சிறப்புரிமைகள் குழுவிற்கு அழைக்குமாறும் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.