ஜனாதிபதி அநுரகுமாரவை பெண்ணுடன் இணைத்து தகவல் ; CID இல் முறைப்பாடு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, பெண் ஒருவருடன் இணைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான தகவல்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் , அவரது சட்டத்தரணியான அகலங்க உக்வத்தே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணை
சமூக ஊடகங்களில் பரவும் இந்த பதிவுகள், ஜனாதிபதியின் தனிமனிதக் கௌரவத்தையும், அரசியல் பிம்பத்தையும் சீரழிக்கும் நோக்கத்துடன் பரப்பப்படுவதாகவும், அவை முழுமையாக பொய்யானவை எனவும் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பொது தலைவர்களை அவதூறுகளுக்குள்ளாக்கும் செயற்பாடுகள் நாடாளுமன்றப் பெரும்பான்மை கொண்ட ஜனநாயக அரசு மற்றும் சமூக நலனுக்கே தீங்கு விளைவிக்கக்கூடியவை ஆகும்.
எனவே , குற்றவாளிகளை அடையாளம் கண்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஜனாதிபதி குறித்த அவதூறு தகவல் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.