வாழ்நாளில் நான் கனவுகூடகண்டதில்லை! ஜனாதிபதி மாளிகைக்குள் ரஸ்மி கவிந்தயா புளகாங்கிதம்
தனது வாழ்நாளில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைவேன் என கனவுகண்டதில்லை என ரஸ்மி கவிந்தயா சந்தோக்ஷத்துடன் கூறியுள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்த மறுநாள் அந்த மாளிகையை பார்ப்பதற்காக கவிந்தயா போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதி மாளிகை பல தாழ்வாரங்கள், அறைகள், ஒரு நீச்சல் தடாகம் மற்றும் அழகான புல்வெளி ஆகியவற்றை கொண்ட காலனித்துவ கட்டிடக்கலையின் அற்புதமான பகுதியாகும்.
இந்த இடத்தின் செழுமையை பாருங்கள் என தனது நான்கு வயது குழந்தைகளுடன் ஜனாதிபதி மாளிகைக்கு வந்த கவிந்தயா தெரிவித்தார். நாங்கள் ஒரு சிறிய கிராமத்தில் சிறிய வீட்டில் வாழ்கின்றோம் என குறிப்பிட்ட அவர் இந்த இடம் மக்களிற்கானது. இது மக்களின் பணத்தில் கட்டப்பட்டது எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அந்த பகுதிக்குள் நுழைய முயல்கின்றனர் ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலர் அவர்களை ஒழுங்குபடுத்துகின்ற நிலையில், பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஒரத்தில் நின்றபடி நடப்பவைகளை பார்த்தவண்ணமுள்ளனர். ஒவ்வொரு அறை அறையாக செல்லும் மக்கள் தேக்குமர மேசைகள் ஓவியங்கள் அறைகள் முன்நின்று அந்த ஞாபகங்களை செல்பி எடுக்கின்றனர்.
அங்கு உடைந்த கதிரைகள் உடைந்த மேசைகள் உடைந்த ஜன்னல்கள் போன்றவற்றின் கண்ணாடிகள் சிதறுண்டு காணப்படுகின்றன. மக்கள் உள்ளே நுழைந்த பின்னர் நிலவிய குழப்பத்தினை நினைவுபடுத்துபவையாக அவை காணப்படுகின்றன. அதேசமயம் இந்த இடத்தை பார்ப்பது எனக்கு கனவு நினைவானது போல உள்ளது என்கின்றார் கனேமுல்லவில் சிறுவர்பூங்காவில் பணியாற்றும் ஏ.எல் பிரேமவர்த்தன.
நாங்கள் எரிவாயு எரிபொருள் உணவிற்காக நீண்ட வரிசையில் காத்திருந்தோம் ஆனால் ராஜபக்சாக்கள் வேறு விதமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் போல தோன்றுகின்றது என கூறுகின்றார் அவர். அதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகும்வரை அவர்களின் உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேறப்போவதில்லை என தெரிவித்துள்ளோம் என்கின்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் தலைவர். கட்டிடங்களை பார்ப்பதற்காக மக்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு காணப்பட்ட போதிலும் இராணுவத்தினரும் பொலிஸாரும் அமைதியாக வேடிக்கை பார்த்தனர். ஜனாதிபதி மாளிகையின் நீச்சல் தடாகமே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. குடும்பங்கள் நீச்சல் தடாகத்திற்கு அருகில் நின்று அதனை பார்வையிடுகின்ற இளைஞர் ஒருவர் அதற்குள் குதித்தவேளை சுற்றிநின்றவர்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர்.
தனது இரண்டு பதின்மவயது மகள்களுடன் அங்கு வந்த நிரோசா சுதர்சினி ஹட்சின்சன் நான் கவலையடைகின்றேன் என தெரிவித்தார். ஏனெனில் ஜனநாயக வழிமுறை மூலம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட நபர் இவ்வாறு அவமானகரமான முறையில் வெளியேறவேண்டிய நிலையேற்பட்டது.
நாங்கள் அவருக்கு வாக்களித்தமைக்காக வெட்கப்படுகின்றோம். நாட்டிலிருந்து அவர்கள் கொள்ளையடித்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்கவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என அவர் குறிப்பிட்டார்.
படுக்கையொன்றே அதிகம் மக்களை கவர்ந்ததாக காணப்பட்டது. அங்கு இளைஞர்கள் குழுவொன்று ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. தாழ்வாரங்களில் இலங்கையின் மூன்று மொழியையும் கேட்க முடிந்தது. அங்கு வருபவர்களின் பரபரப்பும் ஆர்வமும் வெளிப்படையாக தென்பட்டது. மாளிகைக்கு வெளியே அழகாக ஒழுங்குபடுத்தப்பட்ட பரந்த புல்வெளியில் நூற்றுக்கணக்கான மக்கள் பௌத்தர்கள் கிறிஸ்தவர்கள் இந்துக்கள் காணப்பட்டனர்.
இலங்கையர்கள் தங்களது பல மாத காலப் போராட்டம் இறுதியாக பொருளாதாரச் சரிவுக்குக் காரணமான தங்கள் நாட்டின் தலைவர்களை அகற்றுவதற்கு வழிவகுத்ததாக உணர்கிறார்கள்.
அதேசமயம் நாட்டு மக்கள் அதியாவசிய பொருட்கள் இன்றி பசியும் பட்டியுமாய் இருந்த நிலையில் அவர்களின் தலைவர்களின் வாழ்க்கை முறை அவர்களை மேலும் கோபப்படுத்துகிறது.