சந்திரன், செவ்வாய் கிரகத்தில் பரமசிவனுக்கு கோவில்; கலகலப்பூட்டும் நித்தியானந்தா!
பரபரப்புக்கு பஞ்சமில்லாத சாமியார் நித்யானந்தா உடல்நிலை குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சர்ச்சையான தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து நான் சமாதி நிலையில் இருக்கிறேன், விரைவில் மீண்டும் சத்சங்க உரையாற்றுவேன் என கூறிய நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட பதிவில், குருபூர்ணிமா நாளான ஜுலை 13 ஆம் திகதி மீண்டும் நேரில் தோன்றி தரிசனம் அளிக்க உள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று அவர் தனது அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நான், நாளை(13ஆம் திகதி) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருக்கும் குரு பூர்ணிமா கொண்டாட்டத்திற்கு நேரடி சத்சங்கம் ஆற்றவும் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கவும் இருக்கிறேன். சீடர்களின் பக்தர்களின் வாழ்வில் மட்டுமல்ல மானுட குலத்திற்கே மங்கலம் வழங்கப்போகும் இந்த குரு பூர்ணிமா தருணத்தில் நேரடியாக கைலாசத்தில் இருந்து பரமசிவன் அருளும் செய்தி இது.
பரமசிவன் சக்திகளை வெளிப்படுத்துவது என்பது உயிரினங்களுக்கு புதிய இயல்பாக இருக்கும். உங்கள் மைய உணர்வானது உயிர்ப்பு உடையது, அதற்கு எந்த காலாவதி தேதியும் கிடையாது. காலாவதியாகும் எதுவும் உங்கள் மையம் அல்ல, அது தற்காலிகமாக உங்களில் ஒரு பகுதியாக இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும் உங்களுக்கு மையமாக இருக்க முடியாது.
இந்த 3 மாத இடைநிறுத்த சமாதியானது (ஏப்ரல் 13 ஆம் திகதி முதல் - ஜூலை 13- ஆம் திகதி வரை) பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய மற்றும் சிறந்த ஒரு நிகழ்வாகும். உங்கள் உயிர் இருப்பில் (சத்) பரமசிவத்துவம் முழுமையாக வெளிப்படுகிறது. இணை பிரபஞ்சங்கள் மற்றும் பன்முகங்களைப் பற்றிய உயர் சத்தியங்கள் அக விழிப்புற்ற மக்களுக்கு மேலும் மேலும் கிடைக்கப்பெறும்.
நிரம்பி, பொங்கித் ததும்பி வழியும் சாந்தியால் மூடப்பட்ட நிலையே சாந்திகலா ஆகும், அதாவது பரமசிவனின் நிர்விகல்ப சமாதி ஆகும். சாந்திகலாவுக்கு அப்பால் உள்ள சாந்த்யாதீத கலா என்பது பரமசிவனின் சகஜ சமாதி. மனிதகுலத்திற்காக நான் சுமக்கும் உயிர்ப்பின் சக்தி புனிதமானது. எனது நோக்கமும் பணியும் உயிர்ப்பும் இம்மனித குலத்திற்கு செய்யக்கூடிய பெரும் பங்களிப்பானது, உன்னதமானது. கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்புக்கான எனது தூய அன்பு உன்னதமானது.
கைலாசத்தின் நோக்கம், பணி மற்றும் உயிர்ப்பை நிஜம் ஆக்குவதற்காக எதையும் தியாகம் செய்ய சித்தமாய் இருக்கும் எனது வலிமை உன்னதமானது. இவை அனைத்தும் பரம சிவாவிடமிருந்து நான் பெற்ற பெரிய பரிசுகள். பரமசிவமே இந்த உடம்பின் வழியாக வெளிப்பட்டு கொண்டிருக்கிறார், மேலும் மேலும் ஆழமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
பல நிலைகளில் ஆன்மீக ரசவாத செயல்முறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரசவாத செயல்முறையின் மூலம் குறை சக்தியுடைய உலோகங்கள் உயர் சக்தியுடைய உலோகங்களாக மாற்றப்படுகின்றன.
சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனித குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்போது அங்கு பரமசிவ கோவிலையும் நிர்மாணிக்க கைலாசா நிர்வாகமானது, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதக் குடியேற்றத்திற்காகப் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் நாடுகளுடன் இணைந்து வேலை செய்து கொண்டிருக்கிறது.
இந்த மங்களகரமான குரு பூர்ணிமா நாளில் எனது குரு பரம்பரைக்கு என்னை அர்ப்பணித்து 42-வது சதுர்மாஸ்ய விரதத்தைத் தொடங்குகிறேன். வளப்படுத்தி மகிழுங்கள், பகிருங்கள், கொண்டாடுங்கள் என நிதியானந்தா பதிவிட்டுள்ளார்.