மருமகனுடன் சேர்ந்து மனைவியை கொன்ற கணவன்; கொழும்பில் பயங்கரம்
கொழும்பு - கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டேஸ் வீதி, நவகம்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் இரண்டவது கணவரும் மருமகனும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மகளுக்கு வந்த சந்தேகம்
நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவர் ஏப்ரல் 22 ஆம் திகதியிலிருந்து காணாமல்போயுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இந்நிலையில் தனது தாயாரை , சிறிய தந்தையும் மருமகனும் இணைந்து அவரை கொலை செய்திருக்கலாம் என காணாமல்போன பெண்ணின் மகள் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல்போன பெண்ணின் வீட்டை சோதனையிட்டுள்ளனர்.
சோதனையில், வீட்டினுள் அங்கங்கே இரத்தம் சிதறி காணப்பட்டுள்ள நிலையில் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. பின்னர் குறித்த வீட்டிற்கு அருகில் உள்ள சிசிரிவி கமராவை பொலிஸார் சோதனையிட்டுள்ளார்.
உரைப் பைகளை எடுத்துச் செல்லும் காட்சிகள்
இதன்போது, காணாமல்போன பெண்ணின் இரண்டாவது கணவரும் மருமகனும் வீட்டிலிருந்து மூன்று உரைப் பைகளை வெளியே எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளதை பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர்கள் இருவரும் காணாமல்போன பெண்ணை கொலை செய்து அவரது சடலத்தை துண்டுகளாக வெட்டி உரைப் பைகளில் போட்டு நவகம்புர பிரதேசத்தில் உள்ள குப்பை ஆற்றில் வீசியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரும் கிராண்ட்பாஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.