ஈபிடிபியிடம் மூன்று பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனிதாபிமான உதவி
2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது மூன்று ஆண் பிள்ளைகளையும் கடத்திச் சென்றதாகக் குற்றஞ்சாட்டி, நீண்டகாலமாக நீதிக்காகப் போராடி வரும் யாழ்ப்பாண புங்குடுதீவைச் சேர்ந்த தாயொருவருக்கு, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா 50,000 ரூபா பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளார்.
குறித்த பெண் அண்மையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பேரணியில் கலந்துகொண்டு, தனது பிள்ளைகளைக் காணவில்லை என்றும், அவர்களைத் தேடி நீண்டகாலமாகப் போராடி வருவதாகவும் ஊடகங்களிடம் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தில் வசித்து வந்த தனது மூன்று ஆண் பிள்ளைகளையும், சிறிலங்கா கடற்படையினரும் ஈபிடிபி உறுப்பினர்களும் இணைந்து கடத்திச் சென்றதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடத்தப்பட்ட பிள்ளைகளில் ஒருவர் 16 வயதைக்கூட எட்டாத சிறுவன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவரையும் இழந்துள்ள நிலையில், வாழ்வாதாரமின்றி வறுமையில் தவித்து வரும் குறித்த தாயின் நிலை தொடர்பில், தமிழ்த்தேசிய பேரவையின் பிரமுகரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் பிரதிச் செயலாளருமான கருணாகரன் நாவலன், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, தமிழ்த்தேசிய பேரவையின் இணைத்தலைவரும் ஜனநாயக தமிழரசுக் கட்சியின் தலைவருமான கே.வி.தவராசாவின் 50,000 ரூபா நிதிப் பங்களிப்பில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புப் பொருட்கள், குறித்த தாயின் இல்லத்துக்கு நேரில் சென்று வழங்கி வைக்கப்பட்டன.
நீண்டகாலமாகத் தனது பிள்ளைகளைக் காணாமல் தவித்து, நீதிக்காகப் போராடி வரும் தாயின் வாழ்வாதாரத் தேவைகளைக் கருத்திற்கொண்டு இந்த மனிதாபிமான உதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

