தமிழர் பகுதியொன்றில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பெருந்தொகை மாட்டிறைச்சி மீட்பு
வவுனியா மாநகரசபையின் அதிரடி நடவடிக்கையில், சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 550 கிலோ மாட்டிறைச்சி இன்று (04) கைப்பற்றப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது:
கைப்பற்றப்பட்ட இறைச்சி
இன்று மாலை கிளிநொச்சியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்தில், உரிய பாதுகாப்பு அல்லது சுகாதார வசதிகள் இன்றி இந்த மாட்டிறைச்சி கடத்தப்பட்டுள்ளது.
குறித்த இறைச்சி வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் பேருந்திலிருந்து இறக்கப்பட்டு, முச்சக்கரவண்டியில் மாற்றி ஏற்றிச் செல்லப்படவிருந்தது.
இது தொடர்பாக பொதுமக்களால் வவுனியா மாநகரசபைக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, மாநகரசபையின் பிரதி முதல்வர் மற்றும் உறுப்பினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, இந்தச் செயற்பாட்டை தடுத்து நிறுத்தி, இறைச்சியை கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட இறைச்சியின் மொத்த நிறை சுமார் 550 கிலோ என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை சுகாதாரப் பரிசோதகரின் மேற்பார்வையில் எடைபார்க்கப்பட்டு, மாநகரசபையின் களஞ்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன.
குறித்த இறைச்சியைக் கடத்தியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மாநகரசபையின் முதல்வர் தெரிவித்தார்.