உடலில் 26 தொலைபேசிகள் ; பலியான 20 வயது இளம்பெண்
பிரேசிலில் 20 வயது பெண் ஒருவர், 26 கைப்பேசிகளை உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், பேருந்தில் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பேருந்தில் பயணித்தபோது மூச்சுவிடுவதில் சிரமப்பட்ட அந்தப் பெண் தரையில் விழுந்து கிடந்துள்ளார். பேருந்தில் இருந்தவர்கள் இது குறித்து அவசர வைத்திய சேவைக்கு தகவல் அளித்துள்ளனர்.
உடலில் 26 கைப்பேசிகள்
ஆனால், வைத்தியக் குழுவினர் வந்து பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
பரிசோதனையின்போது, அவரது உடலில் 26 கைப்பேசிகள் கட்டப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசிகளால் ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர்.
மேலும், அவரது சூட்கேஸில் பல மதுபான போத்தல் மற்றும் கைப்பேசிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. பரானா சிவில் பொலிஸார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்துவதற்காக தடயவியல் அறிக்கைகளுக்காக காத்திருக்கின்றனர்.
கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் பிரேசிலின் கூட்டாட்சி வருவாய் சேவைக்கு அனுப்பப்பட்டுள்ளன.